சென்னை: காற்பந்து வீராங்கனையான பிரியா, 17, தவறான சிகிச்சையால் மரணமடைந்ததாகக் கூறப்படும் வேளையில் அவருக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, ராணி மேரி கல்லூரியில் உடற் கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார்.
காற்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த மாதம் 20ஆம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டு வலியால் அவதிப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில், பிரியாவுக்கு கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது.
காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து பிரியாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், மாணவி படித்த ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் நேற்று காலை மெளன அஞ்சலி செலுத்தினர்.
மாணவி பிரியாவுக்கு ஏற்பட்ட 'Ligament Tear' என்பது காற்பந்து விளையாடும் 100 நபர்களில் 50க்கும் அதிகமானோருக்கு ஏற்படக்கூடியது. இதற்கிடையே, காற்பந்து வீராங்கனை உயிரிழப்பு கவனக் குறைவால் நிகழ்ந்துள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்வதாக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட மருத்துவர் அறிக்கையை வைத்து இரு மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை நடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

