செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b64c8a24-9c98-4f1a-9863-ac5f38bbaf92
-

அதே தவறை மீண்டும்

செய்யாதீர்கள்: கமல்ஹாசன்

சென்னை: கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து பேசினோம். இப்போது, இதுபற்றி விவரிக்க முடியாது என்றார்.

தஞ்சை அம்மன் கோயில்

நகையைக் காணவில்லை

தஞ்சாவூர்: தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் உள்ள பிரசித்துபெற்ற படைவெட்டி மாரியம்மன் கோயிலில் நகை காணாமல் போயுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது.

நேற்றுக் காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை.

தகவலறிந்து அங்கு வந்த தஞ்சை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களுக்கு காவல் துறை வலை வீசியுள்ளது.

டெங்கி காய்ச்சலுக்கு

ஐவர் மரணம்

சென்னை: தமிழகத்தில் ஜனவரியிலிருந்து இதுவரை டெங்கி காய்ச்சலுக்கு ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோட்டூர்புரத்தில் கொசுவலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், சென்னையில் 2.60 லட்சம் பேருக்கு கொசுவலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

சைதாப்பேட்டையில் நீர் வழிப் பாதையில் அதிக மக்கள் வசித்து வருவதால் அப்பகுதியில் 23,000 பேருக்கு கொசுவலை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"சென்னையில் கொசு ஒழிப்பு, கொசு மருந்து தெளிப்பில் 3,278 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு ஒழிப்புக்குத் தேவையான சாதனங்கள் போதுமான அளவில் உள்ளன," என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.