சென்னை: கல்லூரி மாணவியும் காற்பந்து வீராங்கனையுமான பிரியாவின் (படம்) மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளதால், அதற்குக் காரணமான இரு மருத்துவர்களும் எந்நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமறைவாகி உள்ள இரு மருத்துவர்களும் முன்பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த காற்பந்து வீராங்கனை பிரியா, கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் இரு வரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, தலைமறைவாகி உள்ளனர்.
வெளிப்படையான விசாரணை
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "பிரியாவின் மரணத்தில் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படாது. கவனக்குறைவாக செயல்பட்ட அனைவரது மீதும் அவரவர் எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.
பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம், காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.
அதில், பிரியாவுக்கு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த தாதியர், சுழற்சி முறையில் பணியில் இருந்த மருத்துவர்கள் அனைவருமே கவனக்குறைவாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட உள்ளது. அந்த அழைப்பாணைக்கு முன்னிலையாகாதவர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா பெயரில் காற்பந்துப் போட்டி
பிரியா இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பிரியாவின் பெயரில் ஒரு மிகப்பெரிய காற்பந்தாட்டப் போட்டியை நடத்தப் போகிறோம். 10 வீராங்கனைகள் காற்பந்தாட்டப் பயிற்சி பெற பாஜக முழு செலவையும் ஏற்கும்," என்று தெரிவித்தவர், முதல்வரின் சொந்தத் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இத்தவறு நடந்துள்ளதால் அதற்கு மருத்துவத் துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா? என்று வினா எழுப்பியுள்ளார்.