கடலூர்: மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காகச் சென்று, கடைசியில் தன் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார் உமாவதி என்ற பெண்.
இதனைக் கண்டித்து அவரது உறவினர்கள் கண்களைக் கட்டி போராட்டம் நடத்தினர்.
"பறிபோன கண்பார்வை உமாவதிக்கு மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் சான்றோர்பாளையத் தைச் சேர்ந்தவர் உமாவதி. இவர், கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
பொதுவாக இந்த சிகிச்சைக்குப் பின்னர், நான்கு அல்லது ஐந்து நாள்களுக்குள் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய உமாவதியை, கண்பார்வை பாதிக்கப்பட்டதால் ஒருமாதகாலம் வரை மருத்துவமனையில் வைத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதனிடையே, மூக்கு அறுவை சிகிச்சைக்காக வந்த தனக்கு ஏன் கண் பார்வை தெரியவில்லை என்று உமாவதி மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மருத்து வர்கள், ரத்தக்கட்டு காரணமாக அப்படி உள்ளது என்றும் நாளடைவில் கண்களின் பார்வை சரியாகிவிடும் என்றும் கூறி, அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், வீடு திரும்பி இரண்டு மாதங்களாகியும் கண்பார்வை திரும்பாததால், உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அதுகுறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகளை விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள், கடந்த மாதத்தில் ஒரு சிறுவனுக்கு கையில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் ஒரு பெண்ணுக்கு வயிற்றுடன் குடலையும் சேர்த்து தைத்துவிட்டதாகவும் இந்தச் சம்பவங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து உமாவதி கூறுகையில், "மூக்கில் உள்ள சதையை அகற்றுவதற்கான அறுவை சிகிச் சையை முடித்தபிறகு என் இரு கண்களிலும் பார்வை பறிபோனது.
"கண்ணிற்குச் செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்றும் அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்தால்கூட ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கிடைக்கும் என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்," என்று சொன்னார்.
மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணுக்கு பார்வை பறிபோனதை அடுத்து, மருத்துவர்கள் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினர். படம்: தமிழக ஊடகம்

