பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே விவசாய நிலத்தில் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்ற விவசாயியின் கரும்புத் தோட்டத்தில் இந்த 11 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்ணிற்கு மேல் 8 அடியும் மண்ணிற்குக் கீழ் 3 அடியும் கொண்டதாக இந்தச் சிவலிங்கம் உள்ளது.
இந்த லிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றை பார்த்தவாறு கிழக்கு நோக்கியும் லிங்கத்தின் மேல்பகுதி தட்டையாகவும் உள்ளது.
ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்கலாம் என்றும் லிங்கத்தின் அமைப்பையும் பிற சூத்திரக் குறியீட்டையும் வைத்துப் பார்க்கும்போது ஏறக்குறைய 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இது இருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிமல்லம் சிவலிங்கம்தான் பழமையானது என்று கருதி வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இந்தச் சிவலிங்கம் உயரமான, பழமையான சிவலிங்கமாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
"கடந்த 22 வருடமாக நான் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது இது சிவலிங்கம் என்று எனக்குத் தெரியாது. பாண்டியன் நட்ட கல் என்று கூறினர். ஆய்வு செய்த சிலர் இது பழமையான சிவலிங்கம் என்று உறுதிப்படுத்தினர்," என்று நடராஜ் கூறியுள்ளார்.

