சென்னை: மியன்மார், கம்போடியா, தான்சானியா ஆகிய நாடுகளில் பணிபுரிவதற்காகச் சென்று, அங்கு சரியான வேலை கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வந்த 22 பேர் மீட்கப்பட்டு தமிழகம் திரும்பி உள்ளனர்.
சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
படித்த இளைஞர்களிடம் லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தகவல்தொழில் நுட்பத் துறையில் பணி வழங்குவதாகக் கூறி அவர்களை போலி முகவர்கள் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், தாய்லாந்தில் சரியான வேலை வழங்கப்படாமல் அங்கி ருந்து மியன்மார், தான்சானியா நாடுகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் தங்களது பிள்ளைகள் சித்திரவதை களை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர்களை மீட்கவேண்டும் என்றும் பெற்றோர் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மாநில அரசின் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை மூலம் அண்மையில் இரு கட்டங்களாக 26 பேரும் இப்போது மூன்றாவது கட்டமாக 22 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியபோது, "போலி முகவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி கம்போடியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்குச் சென்ற தமிழக இளைஞர்களைச் சட்டவிரோ தக் காரியங்களில் ஈடுபடும்படி துன்புறுத்தி உள்ளனர். இவர்களை மீட்டதுபோல் வெளிநாடுகளில் தவித்து வரும் மேலும் சிலரை மீட்கும் பணியும் தொடர்ந்து வருகிறது," என்றார்.
'உயிர் பிழைத்ததே பெரிய காரியம்'
தமிழகம் திரும்பிய இளையர்கள் கூறுகையில், ''ஏழ்மைச் சூழ லால் மியன்மாருக்கு வேலைக்குச் சென்றோம். ஆனால், அங்கிருந்து உயிர்பிழைத்து வந்ததே பெரிய காரியமாக நினைக்கிறோம். எங்க ளுக்கு மறுபிறவி கிடைத்துள்ளது. எங்களைச் சட்டவிரோத வேலை களில் ஈடுபட வைத்து துன்புறுத்தி னர். 17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யாவிடில் தண்டனை தருவார்கள். ஒரு வேளை மட்டுமே உணவு தந்து அறையில் அடைத்து வைத்தனர். பல கொடுமைகளில் சிக்கிய எங்களைக் காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி.
"எங்களது படிப்புக்கு ஏற்ற வகையில் அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்," என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

