சென்னை: காற்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் இருவருக்கும் முன்பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சரணடைந்தால் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.
முன்னதாக, மாணவிக்குச் சிகிச்சையளித்த மருத்துவா்கள் பால் ராம்சங்கா், சோமசுந்தா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களைப் பிடிக்க கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், "மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் அரசு மருத் துவர்கள் சங்கம் தீவிர போராட் டத்தில் ஈடுபடும்," என்று மதுரையில் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவில், "மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. பல்வேறு அறுவை சிகிச்சைகளை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம். நாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர், இப்போது நலமாக உள்ளனர்," என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனிடையே, கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். "ஏற்கெனவே கூறியபடி வெளிப்படைத் தன்மையோடு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
"அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை துல்லியமாக, மிகவும் சிறப்பாகச் செய்துள்ளனர். அதில் குறையில்லை. ஆனால், அறுவை சிகிச்சையின்போது ஒரு சிறு கட்டு போட்டுள்ளனர். அதனை உடனடியாக எடுத்திருக்கவேண்டும். எடுக்காமல் மறந்துபோனது தான் கவனக்குறைவுக்கான முக்கியக் காரணம். இதனால்தான் மாணவி உயிரிழந்துள்ளார்.
"இந்தக் கவனக்குறைவுக்கும் அலட்சியத்துக்கும் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா, 17, ராணி மேரி கல்லூரியில் படித்து வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், தொடர்ந்து வலி இருந்ததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுநீரகம், ஈரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு, கடந்த 15ஆம் தேதி பிரியா உயிரிழந்தார்.

