ராமஜெயம் கொலை வழக்கு: ஐவருக்கு மருத்துவப் பரிசோதனை
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் மீதமுள்ள ஐவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. மீதமுள்ள மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்து வருகிறது.
காலாவதியான மருந்துகளால் அரசுக்கு ரூ.27 கோடி இழப்பு
சென்னை: தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி காலாவதியாக்கி அரசுக்கு ரூ.27 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக மருத்துவ, கிராமப்புற சுகாதாரச் சேவை முன்னாள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன் உள்ளிட்ட நால்வர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.13 கோடி அளவிற்கே மருந்துகளின் தேவை இருந்த நிலையில், ரூ.40 கோடிக்கு போலி ஆவணம் தயாரித்து மருந்துகள் வாங்கியது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாவட்ட நிர்வாகங்களைத் தயாராக இருக்கும்படி உத்தரவு
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று, நாளை, நாளை மறுநாளன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்களைத் தயாராக இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கனமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
15 நிறம், வடிவங்களில் சேலை; ஐந்து விதமாக இலவச வேட்டி
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனவரி 10ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு நிறங்களில் 15 புதிய வடிவங்களில் சேலைகளும் ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகளும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

