திருச்சி: ஆயிரம் அவதாரங்கள் பூசி வந்தாலும் விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில் சூழ்ச்சி யாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி தனிப்பாதையை உருவாக்கியதாக அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"நீதிக் கட்சி உருவாகிய நாள்தான் சமூக நீதியின் அரசியல் குரல் உருவான நாள். சாதியின் பெயரால் கல்வி, வேலை வாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இட ஒதுக்கீடு என நமது நெடும் பயணத்துக்கான முதல் அடி இந்நாளில்தான் எடுத்து வைக்கப்பட்டது," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்நாளில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீதிக்கட்சி உருவாக்கிய பாதையானது வரலாறு காட்டும் வெளிச்சம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

