சென்னை: ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மனித இனம் தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கு ஆய்வு ரீதியான முடிவுகள் நிறைய உண்டு என்று தமிழக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உற்றுநோக்கினால் பழைய கற்காலம், நுண்கற்காலம் தொடங்கி இன்றுவரை எல்லா வகையான நாகரிகத்துடன் தொடர்ச்சியான பண்பாட்டுகளில் நிலைபெற்றிருப்பது தமிழ்ச் சமூகம் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தகவல்களையும் தரவுகளையும் தெரிவித்து வருகிறது என்றார்.
"இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், தமிழகத்தில்தான் இரும்பின் பயன்பாடு துவங்கியிருக்கிறது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயன் பாட்டை அறிந்த சமுதாயமாக தமிழ்ச்சமுதாயம் இருந்தது. இது தொடர்பாக மயிலாடும்பாறையில் நமது தொல்லியல்துறை நிகழ்த்தி இருக்கும் ஆய்வுகள் திட்டவட்டமான முடிவுகளை தந்திருக்கின்றன," என் றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.