மதுரையில் பரவும் 'மெட்ராஸ் ஐ'
மதுரை: அண்மைய சில நாள்களாக மதுரையில் 'மெட்ராஸ் ஐ' கண் நோய் வேகமாகப் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அரசு, தனியார் கண் மருத்துவ மனைகளில் இதற்கான சிகிச்சை பெற தினமும் பலர் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனையின் கண்நோய் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 140 பேர் சிகிச்சை பெற்றதாக துறைத்தலைவர் மருத்துவர் விஜயசண்முகம் தெரிவித்தார். "இப்பிரச்சினைக்கு சொட்டு மருந்து போட்டால் சரியாகிவிடும். எனினும் இந்தத் தொற்று யாரிடமிருந்து எப்படிப் பரவும் என கணிக்க முடியாததால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது," என்று மருத்துவர் விஜயசண்முகம் தெரிவித்துள்ளார்.
சொத்துத் தகராறு காரணமாக பெற்ற தாயை குத்திக்கொன்ற மகன் கைது
சென்னை: சொத்துத் தகராறு காரணமாக பெற்ற தாயை குத்திக்கொன்ற மகன் கைதானார். சென்னை புறநகர்ப் பகுதியான மதுரவாயலைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான சரோஜா என்பவர் தனது மகன் கபாலியுடன் வசித்து வந்தார். சொத்து தொடர்பாக கபாலிக்கும் அவரது மூன்று சகோதரிகளுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அவர் தாயாருடனும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினமும் இருவரும் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த கபாலி வீட்டில் இருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் சரோஜாவை சரமாரியாகக் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சரோஜா சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
ராமஜெயம் கொலை வழக்கு: 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை
திருச்சி: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் இளைய சகோதரரான ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மேலும் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் கைபேசி பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 13 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் இந்தச் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றபோது ராமஜெயம் கொல்லப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவருக்கு எதிர்ப்பு: மேலிடத்தில் புகாரளிக்க முடிவு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீது கட்சி மேலிடத்தில் புகார் அளிக்க ஒரு தரப்பினர் முடிவு செய்துள்ளனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் நிகழ்வை இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மல்லிகார்ஜுன கார்கே தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக காங்கிரசார் அவரிடம் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குறித்து புகார் அளிக்க உள்ளனர். இதற்கிடையே, அழகிரி யாரிடமும் பாகுபாடு காட்டவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். வீண் புகார் அளிப்பவர்கள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

