சென்னை: சிறார் திருமணங்களை நிறுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 11 மாதங்களில் மட்டும் 255 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் 511 மாணவிகளுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சிறார் திருமணங்கள் குறித்து தனியார் அமைப்பு ஒன்று அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.
இதில், கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பிறகு சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், இந்த மாணவர்களில் 511 பேருக்கு திருமணம் நடந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறை மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மாணவர்களை தொடர்புகொள்ள முயன்றபோது தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கும்கூட திருமணம் நடந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில்தான் சிறார் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளதாக பள்ளிகல்வித் துறை தெரிவித்தது.
கடந்த 11 மாதங்களில் 511 சிறார் திருமணங்கள் நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு சிறார் திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 83 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 சிறார் திருமணங்களும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107, திருவண்ணாமலையில் 28 சிறார் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தம் 4 மாவட்டங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

