கத்தாரில் உணவுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ள சூழலில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோடிக்கணக்கில் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி காரணமாக அங்கு முட்டையின் தேவை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு மாதந் தோறும் 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒன்றரை கோடியாக கூடியுள்ளது.
இதுதொடர்பாக முட்டை ஏற்று மதியாளரான டாக்டர் பி.வி.செந்தில் கூறுகையில், "நாமக்கல்லில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி நடைபெறுவதால் அங்கு உணவுப் பொருள்களுக்கான தேவை, குறிப்பாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது," என்றார்.
நான்கு கோடி முட்டைகள் இதேபோல் நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு சிற்றரசு, ஓமான், பஹ்ரைன், மாலத்தீவுக்கு மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த முட்டைகள் இப்போது நான்கு கோடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்றும் பி.வி.செந்தில் கூறினார்.
"உக்ரேன்-ரஷ்யா போர் கார ணமாக அனைத்துலகச் சந்தையில் கோழித் தீவனம் விலை உயர்ந்துள்ளதால் முட்டை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் துருக்கி போன்ற நாடுகள் விலையை உயர்த்தியுள்ளன.
"அதைவிட நாமக்கல் முட்டை விலை குறைவு என்பதால் கத்தார், ஓமான் உள்ளிட்ட நாடுகள் நாமக்கல் முட்டைகளை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளன," என்று மற்ற சில முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.