சென்னை: மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்து 60,000 பழைய குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்துவிட்டு, ஏழை மக்கள் பயனடையும் வகையில் ரூ.2,080 கோடியில் புதிய வீடுகள் கட்டித் தரப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு 18 மாதங்கள் ஆகும் என்பதால், அதுவரை அங்கு வசித்தவர்கள் வாடகை வீடுகளில் வசிக்க வேண்டியிருக்கும். இதற்கு ஏதுவாக குடியிருப்பாளர்களுக்கு ரூ.24,000 நிவாரணமாக வழங்க உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித் தாா்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காந்திபுரம் பகுதியில், சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில் விலையில்லா கொசுவலைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, "குடிசை மாற்று வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக கட்டித் தருவதற்கு 18 மாதங்கள் எடுக்கும். அந்தச் சமயத்தில் குடியிருப்பாளர்கள் வாடகைக்கு இடம் தேட வேண்டியிருக்கும்.
"இதுபோன்ற தருணங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு கடந்த ஆட்சியில் ரூ.8,000 மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு அதனை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க உள்ளது.
"அத்துடன், சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் 280 சதுர அடிகள் மட்டுமே இருந்தன. தற்போதைய சூழலில் இவ்வளவு சிறிய வீட்டில் குடியிருப்பது மிகவும் சிரமம் என்பதால், ஒவ்வொரு குடியிருப்பையும் 420 சதுர அடியில் கட்டித்தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
"ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.13 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதில், ரூ.1.50 லட்சத்தை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் ரூ.1.50 லட்சமும் கொடுக்கின்றனர்.
"மீதமுள்ள ரூ.10 லட்சத்தை தமி ழக அரசு அளிக்கிறது," என்று தெரிவித்தார்.

