ஒட்டன்சத்திரம்: இந்தியாவில் இருந்து 80 விழுக்காடு அளவுக்கு உலக நாடுகளுக்கு முருங்கைக் காய் ஏற்றுமதி செய்யப்படுவதாக நெதர்லாந்தின் முருங்கைக்காய் இறக்குமதியாளர் லட்சுமணன் ராமு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் வேளாண், தோட்டக் கலைத் துறை சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசிய போது, "தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களும் முருங்கைக்காயை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன.
"இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கைக்கு வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதற்கான தொழில்நுட்பங்களை அறிந்து முருங்கை விவசாயத்தை அதிகரிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டவேண்டும்," என்றார்்.
நெதர்லாந்தைச் சேர்ந்த முருங்கைக்காய் இறக்குமதியாளர் லட்சுமணன் ராமு கூறுகையில், "இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 80 விழுக்காடு முருங்கைக் காய் ஏற்றுமதியாகிறது.
"அதேபோல், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா விடம் இருந்து முருங்கை விதைகளை வாங்கி தங்கள் நாடுகளில் சாகுபடி செய்து முருங்கைப் பொடி, இலை உள்ளிட்டவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் முருங்கையின் சந்தை மதிப்பு ரூ.85,000 கோடியாக இருக்கும்.
"அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் முருங்கையில் உள்ள சத்துகள் குறித்து விளக்குவதற்கு முருங்கைத் தூதுவர்கள் இருப்பதைப் போல் இந்தியாவிலும் முருங்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்," எனத் தெரிவித்தார்.

