கடலூர்: கடலூரில் மூக்கு தசையை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக தனியார் காது மூக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சித் தகவலைக் கேட்டு இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
இதனால் பதற்றம் நிலவவே, மருத்துவமனையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மூக்கு தசையை அகற்றுவதற்காக கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் மயக்க மருந்து செலுத்தியவுடன் அவர் சுயநினைவை இழந்துள்ளார். அத்துடன், அவரது உடல்நிலையும் மோசமாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், கோவிந்தராஜை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்தார்.
இந்நிலையில், கோவிந்தராஜின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே கால் அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்தார். மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண் கண் பார்வை இழந்தார் என தகவல்கள் வெளிவரும் நிலையில், இளைஞர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

