செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e8fbee7d-490f-440d-b476-08eaae5343ed
இரவு நேரத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபடும் பொது மக்கள்.படம்: ஊடகம் -

தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை; பலத்த பாதுகாப்பு

சென்னை: மங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டதை அடுத்து, இரண்டாவது நாளாக விடிய விடிய காவலர்கள் வாகனச் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் குக்கா் குண்டு வெடித்த நிலையில், அது தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவி விடாமல் இருக்க வாகனச் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விழிப்பு நிலையில் இருந்த காவலர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

ஆடுகள் திருட்டை தடுக்க இரவில் காவல் காக்கும் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே ஆடுகள் திருட்டை தடுக்க இரவு முழுவதும் காவல் காக்கும் பணியில் சுழற்சி முறையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் ஊதியூா், காங்கயம், குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளை சந்தேகப் பேர்வழிகள் திருடிச் செல்வது தொடா்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆடு திருட்டைத் தடுக்க முதலிபாளையம், வாணவராயநல்லூா், அப்பியபாளையம், கொத்தனூா், புங்கந்துறை, சிறுகிணறு உள்ளிட்ட கிராமப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆங்காங்கே தாங்களாகவே சோதனைச்சாவடிகளை அமைத்து காவல் காத்து வருகின்றனா். இரவு முழுவதும் சுழற்சி முறையில் கண் விழித்து, அந்தந்த பகுதிகளில் செல்லும் வாகனங்களைச் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனா்.