சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என 13 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அழகிரியின் எதிர்த்தரப்பினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு, கட்சித் தலைமையிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய ஐந்து பேரும் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக உள்ளனர்.
கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக அழகிரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை எனக் கூறப்படுகிறது.
மேலும், இளம் நிர்வாகியை மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால் இப்போதுதான் தாம் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதால் ஒரு மாநிலத் தலைவரை உடனடியாக நீக்குவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறிவிட்டதாகத் தகவல்.
மேலும், தமக்கு எதிரான புகார்கள் தொடர்பில் கே.எஸ்.அழகிரி கட்சித் தலைமைக்கு உரிய விளக்கங்களை அளித்துவிட்டதாகவும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அடுத்த சில நாள்களுக்குள் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் புதுடெல்லிக்குச் செல்ல இருப்பதாகவும் அங்கு கட்சித் தலைமையகத்தில் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக மனு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாநிலத் தலைவரை உடனடியாக மாற்றவேண்டும் என்பதே இவர்களுடைய முதன்மைக் கோரிக்கையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் கடந்த சில தினங்களாக சலசலப்பு நிலவுகிறது.