சென்னை: அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே தமது அரசின் நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்கள் தொடர்பான பணிகள் தொடர்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களைக் கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
"அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
"பொருளாதாரக் குறியீடுகளைக் கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத்தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடு கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
"இந்த நோக்கத்தில் இம்மிஅளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது. இதில் மிக முக்கியமானவை கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகும். எனவே தமிழக அரசு இது தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்தும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், கட்டமைப்பு வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கோடு அரசின் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

