சென்னை: தமிழகத்தில் 'மெட்ராஸ்-ஐ' எனப்படும் கண் தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் நாள்தோறும் சுமார் 4,500 பேருக்கு இப்பாதிப்பு ஏற்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தத் தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரிவை நேரில் பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1918ஆம் ஆண்டில்தான் 'மெட்ராஸ்-ஐ' பாதிப்பு முதன்முறையாக சென்னையில் கண்டறியப்பட்டது என்றார்.
"சென்னையில் கண்டறியப்பட்ட காரணத்தால் இந்தப் பாதிப்புக்கு 'மெட்ராஸ்-ஐ' என்று பெயரிடப்பட்டது என்றும் தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவக்கூடிய தன்மை வாய்ந்தது," என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
'மெட்ராஸ்-ஐ' பாதிப்பு உள்ளவர்கள் வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், தமிழகம் முழுவதும் தற்போது 150,000 பேர் இப்பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
"சிகிச்சைக்கான சொட்டு மருந்து போதுமான அளவு இருப்பில் உள்ளது. மேலும், இந்த நோய் தாமாகவே மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் குணமாகும் தன்மை வாய்ந்தது.
"இந்தக் கிருமியானது எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கும். மழைக்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது தும்மல் மூலமாகவோ அல்லது கைகளால் கண்களைத் தொடும்போதோ இந்த தொற்று பரவுகிறது," என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதும் 'மெட்ராஸ்-ஐ' பாதிப்பு வேகமாகப் பரவ ஒரு காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.

