திருநின்றவூர்: திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளுக்குப் பாடம் தொடர்பாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பள்ளி தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இதுபற்றி மாணவி தோழிகளிடம் தெரிவித்தபோது இதேபோல் அவர் மேலும் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகி வினோத்தின் செயல் குறித்து தங்களது பெற்றோருக்குத் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளிடம் தவறாக நடந்த நிர்வாகி வினோத்தின் செயல்பாட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களிடம் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவிகளின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.
இதற்கிடையே திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளின் பெற்றோரை தடுத்து நிறுத்தினர். அப்போது, மாணவிகளிடம் தவறாக நடந்த வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பள்ளி தாளாளர் வினோத் பல மாணவிகளைத் தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருப்பதாக குற்றம்சாட்டினர்.
ஆனால் நிர்வாகி வினோத் பள்ளியில் இல்லை என்றும் அவர் வெளியூர் சென்று உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

