காஞ்சிபுரம்: சென்னையில் சமையல் எண்ணெய், பருப்பு சார்ந்த பொருள் களை இருப்பு வைக்கும் கிடங்கு களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை மட்டுமன்றி காஞ்சிபுரம், மதுரை, கோவை என்று தமிழகம் முழுவதும் இந்த நிறுவனங்களுக்குத் தொடர்புடைய மொத்தம் 80 இடங்களில் 350க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் பொங்கல் பரி சுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரியின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை அரசுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
அதைத்தொடர்ந்து, சென்னை மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று ஹீரா டிரேடர்ட்ஸ், இண்டகிரேட் சர்வீஸ் புரவைடர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்குச் சொந்தமான ஏராளமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களுக்குத் தொடர்புடைய இடங்கள், உரிமையாளர்கள் வீடுகள், பொருள் கள் வைத்திருக்கும் கிடங்குகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடந்து வந்தது.
காமாட்சி அண்ட் கோ நிறுவனம் பதப்படுத்தப்பட்ட உணவு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது. உணவுப்பொருள் ஏற்றுமதி இறக்குமதி மொத்த விநியோகமும் செய்துவருகிறது.

