மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீா்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கும் பணி நேற்று காலை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் உள்ளிட்டோர் மணி கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் நிவாரண நிதி வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவா ரண நிதியாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இதற்காக, ரூ.16 கோடியே 16 லட்சத்து 47,000 ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த நிவாரணத்தொகையை பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் நேற்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நிவாரணத்தைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், மக்களில் பெரும் பாலானோர் விலைவாசி மின்னல் வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்த 1,000 ரூபாய் நிதி போதுமானது அல்ல என்று தெரி வித்துள்ளனர். சிலர் நிவாரண நிதியை ரூ.3,000 அல்லது ரூ.5,000 ஆக அதிகரித்து தரவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த 11ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்துக் கட்டியது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக மழை பெய்தது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை அடைந்தனர்.
கழுத்தளவு தண்ணீர் குடியிருப்பு களைச் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதார மும் முற்றிலும் முடங்கிப் போனது.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தை இம்மாதம் 14ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதி மக்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

