சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஏராளமான நிதி நிறுவனங்களைத் தொடங்கி, பொதுமக்களிடம் ஆசை வார்த்தை களைக் கூறி ரூ.9,038 கோடியை மூன்று நிதி நிறுவனங்கள் சுருட்டி உள்ளன.
இம்மோசடி மூலம் இரண்டு லட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடியில் தொடா்புடைய எட்டுப் போ் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது.
தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந் திரபாபு கூறியபோது, "குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
"ஏறக்குறைய 9,000 கோடிக்கும் மேலாக இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்ட றியப்பட்டுள்ளது. படிப்படியாக பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
நிதி நிறுவனங்களின் மோசடி குறித்து தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிதி நிறுவனங்களைத் தொடங்கி, இதுகுறித்து கூட்டங்கள் நடத்தி பொதுமக்களைக் கவரும் வகையில் முதலீடு செய்பவர்களுக்கு மாத வட்டியாக 10 முதல் 25 விழுக்காடு வரை தரப்படும் என ஆசை காட்டி மோசம் செய்துள்ளனர்.
பொதுமக்களின் முதலீடுகளைப் பெறுவதற்காக ஆங்காங்கே முகவர்கள், பணியாளர்களை நியமித்து ஆடம்பர நட்சத்திர விடுதிகளில் கூட்டங்களை நடத்தி, பணத்தைப் பெற்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் வட்டித்தொகை, முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தரவில்லை என்று புகார்கள் வந்ததை அடுத்து ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்ததாகக் கூறப்படுகிறது.
ரூ.9,038 கோடி மோசடி
அவற்றுள் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட், எல்.என்.எஸ். அனைத்துலக நிதிச் சேவை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கியமானவை.
ஆருத்ரா நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆருத்ரா நிறு வனம் தொடர்பாக எட்டுப் பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பாஸ்கர், மோகன் பாபு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹிஜாவு நிறுவனம் 600 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெற்றுள்ள நிலையில், சவுந்தரராஜன் என்பவரையும் அவரது மகன் அலெக்சாண்டர் என்பவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் ரூ.6,000 கோடிக்கு முதலீடு செய்துள்ளது தெரியவந்திருக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப் பட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள வர்களைக் கைதுசெய்யவும் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

