150 சவரன் தங்க நகைகள் மீட்பு
சென்னை: திரைப்பட நடிகர் ஆர்.கே. வீட்டில் அண்மையில் 250 சவரன் நகைகளும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில், இப்போது அந்த நகைகளில் 150 சவரன் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நடிகரின் வீட்டில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த ரமேஷ், அவரது நண்பர்கள் கிருஷ்ணா, கரண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'வந்தே பாரத்' ரயில்களை இயக்க
பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை
புதுடெல்லி: சென்னையில் இருந்து கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில்களை இயக்கவேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில்பாதையை அமைக்க தமிழகத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
80% பணியிடங்களை வழங்க தமிழக மக்களுக்கு முன்னுரிமை
சென்னை: தமிழகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் தமிழக மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜிஎம்ஆர் தொழிற்பூங்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைய உள்ள நிலையில், தங்கள் நிறுவனத்தில் 80% பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க நிறுவனம் உறுதியளித்துள்ள தாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நடத்துநருக்கு அபராதம் விதித்த ஆட்சியருக்கு குவிகிறது பாராட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தன் காரில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில், தனியார் பேருந்தில் கூட்டம் திமிறிக்கொண்டு செல்வதைப் பார்த்த அவர், பேருந்தை மடக்கி நிறுத்தி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட பேருந்தின் நடத்துநருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 'முதல்வன்' பட பாணியில் நடத்துனருக்கு அபராதம் விதித்த ஆட்சியரின் நடவடிக்கையை பயணிகள் மட்டுமல்லாது, பலரும் பாராட்டினர்.
ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு
வானூர்: விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஒரே நாளில், ஒரே தெருவில் ஐந்து வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்ததால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் திருடப்பட்டதைக் கண்டு வானூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

