சென்னை: சென்னையில் உலகத் தரத்திலான மாபெரும் ஜவுளி நகரத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் கரூர், காஞ்சிபுரம், திருப்பூர் போன்ற நகரங்களில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற் கான பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜவுளித் துறை, தமிழக அரசின் துணி நூல் துறை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான அனைத்துலக இரண்டு நாள் மாநாடு சென்னை, மணப்பாக்கத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஜவுளித் துறையில் வெளிநாட்டு முதலீடுகள், ஏற்றுமதிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது," எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் மட் டும் 12% பங்களிப்பை அளித்து வருவதாகவும் சொன்ன ஸ்டாலின், "விருதுநகர் மாவட்டத்தில் மிகப் பெரிய ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு ஏதுவாக 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது," எனத் தெரிவித்தார்.
மாநாட்டில் உள்நாடு, அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில், புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனைத் துலக நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, தமிழகத்தின் பல்வேறு வசதி, வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வெளிமாநில, வெளி நாட்டு தொழில் முனைவோர் அனை வரும் தமிழகத்தில் முதலீடு செய்து ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு உதவவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் இந்த ஜவுளி நகரம் அமைக்கப்பட உள்ளதாக மாநில ஜவுளித் துறையின் அதிகாரபூர்வ தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது இந்த ஜவுளித் தொழில்தான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இத்துறை 60 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

