புதுடெல்லி: தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விடுத்த கோரிக்கையை டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தணை பிணை வழங்கியது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விருதுநகர் காவல் எல்லைக்குள் ளேயே தங்கியிருக்கும்படியும் நீதி மன்றம் அவரை அறிவுறுத்தியது.
அதன்பின்னர் நிபந்தனையைத் தளர்த்திய நீதிமன்றம், தமிழகத்துக் குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து, நாடு முழு வதும் பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி கடந்த 1ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக நேற்று முன் தினம் நடைபெற்ற விசாரணையில், "ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து விட்டன. அவர் மீதான மோசடி வழக்கில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்குத் தயாராக உள்ளோம்," என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இன்னும் 45 நாள்களில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பு கோரியதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை பிணையை மேலும் தளர்த்த முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் அவர் தமிழகத்தை விட்டு வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போதைய சூழலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதால் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

