செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9003d98e-f270-4f02-9b20-92b4552ff9bd
-

30,000 ரவுடிகளின் விவரம் அடங்கிய புதிய செயலி அறிமுகம்

சென்னை: குண்டர்களின் விவரங்களை மின்னியல் (டிஜிட்டல்) மயமாக்கி, 'டிராக் கேடி' என்ற புதிய செயலியை காவல்துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப் படுத்தி உள்ளார். இந்தச் செயலியில் மாநிலத்தில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட குண்டர்கள், இதர குற்றவாளிகளின் பட்டியல் இடம்பெற்றிருப்பதுடன், பழிக்குப் பழிவாங்கும் கொலைச் சம்பவங்களைத் தடுக்கமுடியும். குண்டர்களின் சமூக விரோதச் செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம் என்று சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இளையரை இழுத்துச்சென்ற முதலை

கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த திருமலை என்ற இளையரை முதலை ஒன்று இழுத்துச்சென்றதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வடக்கு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலையைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பேருந்துகளில் நிறுத்தம் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்கள் குறித்து அறிவிக்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அமைச்சர்களுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பேருந்து நிறுத்தங்கள் வருவதற்கு 300 மீட்டர் முன்பாகவே நிறுத்தங்களின் பெயர் அறிவிக்கப்படுகிறது. இதற்காக பேருந்தின் உட்புறத்தில் ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்று பயன்பாட்டுக்கு வருகிறது மாற்றுத்திறனாளிகள் நடைபாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகளும் கடற்கரையின் மணல் பரப்பில் சக்கர நாற்காலியுடன் சென்று கடல் அலையில் விளையாடி, கடலை ரசிக்கும் வகையில் இந்த சிறப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.