இந்தி மொழியைலயத் திணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி தமிழ்நாட்டில் 85 வயது முதியவர் ஒருவர் தமக்குத் தாமே தீயிட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயியான தங்கவேல். இந்தித் திணிப்புக்கு எதிராகப் பேசி வந்த அவர், நேற்று காலை தாழையூர் திமுக அலுவலகத்துக்குச் சென்றார். இந்திக்கு எதிராக முழக்கமிட்டபடியே பெட்ரோலை தமது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று தங்கவேலைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், உடல் முழுவதும் தீக் கிரையானதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தீக்குளிக்கும் முன்னர் ஒரு தாளில் சில வாசகங்களை எழுதி கையில் வைத்திருந்தார். "மோடி அரசே , மத்திய அரசே, அவசரம் வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு. இந்தி மாணவ, மாணவியரின் வாழ்க்கையைப் பாதிக்கும் . இந்தி ஒழிக," என்று அந்தத் தாளில் அவர் எழுதி இருந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரிக்கிறது.
இந்தியாவின் வடமாநிலங்களில் அதிகமாகப் பேசப்படும் இந்தி மொழி நாடளவில் 44 விழுக்காட்டினர் பயன்படுத்துவதாக 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக் கெடுப்பு தெரிவிக்கிறது.
மருத்துவம் , பொறியியல் போன்ற படிப்புகளை இந்தி மொழியில் கற்கவும் இந்தியை அதிகாரத்துவ தேசிய மொழியாக ஆக்கவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு கடந்த மாதம் அதிபர் திரெளபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.


