பாஜக பெரும் புள்ளியை வீழ்த்த தென் சென்னை அல்லது கோவையில் கண்
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் இப்போது ஒரு தகவல் பரபரப்பைக் கிளப்புவதாக பேச்சு அடிபடுகிறது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை, கோவையில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், அந்தக் கட்சி களமிறக்கும் முக்கிய வேட்பாளர்களை எதிர்த்து தென் சென்னையில் அல்லது கோவையில் திமுகவுடன் சேர்ந்து களமிறக்க திட்டமிட்டு அதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ள தாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகராக இருந்த கமல்ஹாசன், 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முதலாக களமிறங்கினார். அவரின் கட்சி 2.6% வாக்குகளைப் பெற்றது.
பிறகு கமல், 2021 சட்ட மன்றத் தேர்தலில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அந்தத் தேர்தலிலும் மநீம 2.62% வாக்குகளையே பெற்றது.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதியிடம் தோல்வியடைந்தார்.
மநீம தேர்தல்களில் தனித்து நின்றால் 3% வாக்குகள் கூட கிடைக்காது என்ற நிலை உறுதியாக இருக்கிறது.
இதைக் கருத்தில்கொண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி யுடன் இணைய கமல்ஹாசன் திட்டமிடுவதாக மநீமவில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது. இதை மனதில் வைத்தே அண்மைய காலமாக திமுகவுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் அவர் இணைந்தால் தென் சென்னை அல்லது கோவை தொகுதியை அவருக்கு வழங்க திமுக திட்டமிடுவதாகவும் கோவையில் பாஜக அண்ணாமலை போட்டியிட்டால், அவரை வீழ்த்த இதுதான் சரியான வியூகம் என்றும் திமுக நம்புவதாகவும் கூறப்படுகிறது.
தென் சென்னையும் கோவையும் பாஜக வுக்கு ஆதரவு அதிகம் உள்ள தொகுதிகள் என்பதால், அந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட அந்தக் கட்சியினரிடையே கடும் போட்டாபோட்டி நிலவுவதாகத் தெரியவருகிறது.
அரசியலுக்கு மீண்டும் திரும்ப விரும்பும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தென் சென்னையில் போட்டியிட தான் விரும்புவதாக ஏற்கெனவே பாஜக தலைவர் அமித் ஷாவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், தென் சென்னையில் தான் போட்டியிட விரும்புவதாக முதல்வர் ஸ்டாலினிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார் என்று திமுகவில் தகவல்கள் கிளம்பி உள்ளன.
இவ்வேளையில், திமுக இளையர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

