ஆற்காடு: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை இரு மாவட்டங்களுக்கும் இடையில் உள்ள கேகே தோப்பு மலையடிவார எல்லைப் பகுதியில் கம்பி வண்டி பாணியில் சாராயம் விற்பனை செய்தவர்கள், அதிகாரிகளைக் கண்டு மலையில் இருந்து குதித்து தப்பிவிட்டனர்.
மலை உச்சியில் இருந்து அடிவாரத்தில் இருக்கும் மரம் வரைஒரு கம்பியைக் கட்டி, அதில் பிளாஸ்டிக் கூடை ஒன்றைத் தொங்கவிட்டு மலை மீது இருந்தபடியே சிலர் கீழே உள்ளவர்களுக்குச் சாராயம் விற்று வந்தனர்.
சாராயம் வாங்குபவர்கள், தங்களுக்கு எவ்வளவு தேவை என்பதைக் குறிப்பிட்டு அதற்கான பணத்தை அந்தக் கூடையில் வைக்க வேண்டும்.
மலை மீது இருக்கும் வியாபாரிகள், கூடையை மேலே இழுத்து, பணத்திற்குத் தகுந்தாற்போல் சாராய போத்தல்களை அதே கூடையில் வைத்து கம்பி வழியாக கீழே அனுப்புவார்கள்.
சில காலமாக அந்தப் பகுதியில் இப்படி சாராய வியாபாரம் நடந்து வருவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது சாராய வியாபாரிகள், மலையின் மற்றொரு பகுதி வழியாக கீழே குதித்து உருண்டு தப்பி ஓடிவிட்டனர்.
நீளமான கம்பி, வாளி, லாரி சக்கரத்திற்கான டியூப், சாராய பொட்டலங்கள் முதலானவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். சாராய வியாபாரிகள் எத்தனை பேர் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அனைவரையும் பிடிக்க அதிகாரிகள் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.
இதுபற்றி கருத்து கூறிய காவல்துறை, இந்த வினோத சாராய வியாபாரிகள் விரைவில் பிடிபடுவர் என்று தெரிவித்தது.

