சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சேவை திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தச் சேவை காரணமாக பெண்களுக்கு மாதம் 888 ரூபாய் செலவு மிச்சமாவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வை மாநில திட்டக்குழு நடத்தியது.
விவசாயப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், தொழில்வளப் பகுதியான திருப்பூர் மாவட்டம், வர்த்தகப் பகுதியான மதுரை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் கருத்து தெரிவித்த பெண்கள், மாத சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு கூடுவதாகவும் மாதம் தோறும் சராசரியாக ரூ.888 என்ற அளவில் செலவு மிச்சப்படுவதாகவும் தெரிவித்தனர். இலவச பேருந்து திட்டம் மேம்பாடு காணும் என்று தெரிவிக்கப்பட்டது.