விருதுநகர்: தமிழகத்தின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய, மேலும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுப்பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விருதுநகர் மாவட்டம் வரலாற்றுப் பதிவுகளில் தன்னுடைய தடத்தை அழுத்தமாக பதித்த மாவட்டம் என்றார்.
சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மக்கள் வசிக்கும் பகுதியாக, பண்பாட்டு தொடர்ச்சியாக இன்றைக்கும் அம்மாவட்டம் திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், விருதுநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் செய்திகள் ஏராளமாக உள்ளன என்றார்.
"தமிழகத்தில் மேலும், பல புதிய இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடைபெற வேண்டும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும்.
"குறிப்பாக, பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில், தொல்லியல் ஆய்வு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெறும்.
இதனால், தமிழகத்தின் வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்படும். இந்தியாவின் வரலாற்றை, தென்கோடியிலிருந்து எழுதும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட வேண்டும்," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழகத்தில் கீழடி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஆய்வு நடவடிக்கைகளின்போது பல்வேறு அரிய பொருள்கள் கிடைத்து வருகின்றன.
இதையடுத்து, தமிழகத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

