விருதுநகர்: இணையம் வழி (ஆன்லைன்) நடைபெறும் சூதாட்டத்துக்கு தடை விதிக்க நிரந்தர சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
மாறாக, அந்த மசோதா குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டுள்ளார்.
இது குறித்து மாநில அரசுக்கு அவர் அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள் தமிழக அரசு உரிய பதில் அடங்கிய கடிதத்தை அனுப்பி வைத்தது. எனினும், ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
பொதுவாக, அவசர சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வாரங்களுக்குள் தானாக காலாவதியாகிவிடும். அந்த வகையில் இணைய வழி சூதாட்டத்துக்கு தடை விதித்து கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டமும் காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில், நிரந்தர தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநர் நிரந்தர சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்க தயங்குகிறார் என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
"இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்க ஆளுநரைச் சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால் நேரம் ஒதுக்கித்தரப்பட வில்லை," என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இணைய வழி சூதாட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"ஒரு மாநிலத்தின் முதல்வரும் ஆளுநரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இணைய வழி சூதாட்டத்தை தடை செய்யாவிட்டால் தமிழகம் வேட்டைக்காடாக மாறிவிடும்," என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

