சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சொந்தமான தங்கத்தை உருக்கி, சுமார் நான்காயிரம் கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், கோவில்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் தைப்பூச விழாவையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு நடைப்பயணமாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நாள்தோறும் பத்தாயிரம் பேர் வீதம், 20 நாள்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களின் தங்கம் உருக்கப்பட்டு வங்கிகளில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

