திருப்பூர்: இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு நிலவி வரும் வேளையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தத் திடீர் மாற்றம் காரணமாக ரயில் பயணிகள் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற ரயில் நிலையங்களைப் போன்று திருப்பூர் ரயில் நிலையத்திலும் சில சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை 'சேவை மையம்' என தமிழில்தான் பெயர்ப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சேவை மையம் என்பது ஆங்கிலம், இந்தியிலும்கூட மொழி பெயர்க்கப்பட்டு அதே பலகையில் அந்த மொழி வார்த்தைகளும் இடம்பெற்றன.
இந்நிலையில், திடீர் நடவடிக்கையாக 'சேவை மையம்' என்பதைக் குறிப்பிட 'சகயோக்' என்ற இந்தி வார்த்தை பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இதையே தமிழ் எழுத்துகளைக் கொண்டு 'சகயோக்' என்று எழுதி வைத்துள்ளனர். அதே இந்தி வார்த்தைதான் ஆங்கில எழுத்துகளிலும் அந்தப் பலகையில் இடம்பெற்றுள்ளது.
எனவே அனைவரும் இனி அந்த மையத்தை சகயோக் என்றுதான் குறிப்பிடுவர்.
இதேபோல் ரயில் நிலையத்தின் விளம்பரப் பாதையிலும் இந்தி எழுத்துகள் மட்டுமே பெரிதாகக் காணப்படுகின்றன. பெயரளவுக்கு சிறு தமிழ் வாசகம் உள்ளது என்று குறிப்பிடும் சமூக ஆர்வலர்கள் இது இந்தித் திணிப்பா அல்லது தமிழை மறைக்கும் நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

