ராமேசுவரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடற்படையைச் சேர்ந்த காவல் பிரிவு பறிமுதல் செய்தது. இது தொடர்பாக கீழக்கரை நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலரும் முன்னாள் கவுன்சிலர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் ராமேசுவரம் மண்டபம் பகுதி அருகே கடற்படைகாவல்துறையினர் தீவிர கண்காணிப்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அந்தக் காரில் சில தண்ணீர் கேன்கள் காணப்பட்டன. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தபோது கோகைன் போதைப்பொருளுக்கான மூலப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 360 கிலோ எடைஉள்ள அந்த மூலப் பொருள்களின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.360 கோடி என்று குறிப்பிட்ட அதிகாரிகள், காரில் அவற்றைக் கொண்டு சென்ற கீழக்கரை நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் (45 வயது) என்பவரையும் 19ஆவது வார்டு கவுன்சிலரான 42 வயது சர்ப்ராஸ் நவாஸ் என்பவரையும் கைது செய்தனர். மேலும், போதைப்பொருள்களை படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த 36 வயது ஆடவரும் பிடிபட்டார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை, மீனவர்கள் என்ற போர்வையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த மூவரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

