வேலூர்: தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்வதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இணைய வழி சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் ஒத்துழைக்கவில்லை என்றார்.
"சூதாட்டத்துக்கு தடைவிதிக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நிரந்தரமாக தடை செய்வதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் பார்வைக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை அவர் பதில் அ ளிக்கவில்லை.
"இதற்கிடையே அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது. இனியாவது நிரந்தர தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
"இல்லையெனில் எங்களுடைய நிலைப்பாடு என்ன, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிப்போம்," என்றார் அமைச்சர் துரைமுருகன்.
இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அரசுக்கு துணையாக இருக்கவே ஆளுநர்கள் ஆசைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் ஒரு தரப்பினர் ஆளுநர்களின் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர் என்றார் அவர்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இணைய வழி சூதாட்டத்துக்கு நிரந்தரத் தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால் தமிழக அரசு வருத்தமடைந்துள்ளதாக மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

