புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையால் கைது
புதுக்கோட்டை: தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 24 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் முந்நூறுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்த னர். அவற்றுள் ஐந்து படகுகளில் சென்ற மீனவர்கள் மட்டும் நெடுந்தீவு அருகே மீன்பிடிப்பதில் முனைப்பாக இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த கடற்படையினர், மீனவர்கள் கடல் எல்லையைக் கடந்துவிட்டதாகக் கூறி வழக்கம்போல் கைது செய்தனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 221 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மீனவர்களை விடு விக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சேலம் புத்தகக் கண்காட்சியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை
சேலம்: புத்தகக் கண்காட்சியில் சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் புத்தகக் கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி முடிவடையும் நிலையில், ஏராளமான புத்தகங்கள் விற்பனையாகின்றன. இம்முறை கண்காட்சியில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டன. புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர், என இருநூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு உள்ளனர். மாணவ, மாணவியர்க்கு எனப் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.
சீனப் பயணிகள்: மத்திய அரசிடம் அறிவுறுத்தல் பெறும் தமிழக அரசு
சென்னை: சீனாவில் இருந்து விமானம் வழி தமிழகத்துக்கு வந்து சேரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசிடம் அறிவுறுத்தல் பெறப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் நிலவுவதாக பரப்பப்படும் தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கார் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து அவதூறு: கிஷோர் எம்.சாமி கைது
கோவை: கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களின் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பரப்பியதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கிஷோர் எம்.சாமி கைதாகி உள்ளார். யூடியூப் தளம் மூலம் பலருக்கு அறிமுகமாகி உள்ள இவர் பாஜக ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்ததாக இவர் சில நாள்களுக்கு முன்பு கைதானார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம் குறித்து இவர் தனது கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வந்தார். இதன் மூலம் அவதூறு பரப்பியதாக கோவை காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிறார்களுக்கு கைபேசி: பெற்றோரைக் கண்டித்த உயர் நீதிமன்றம்
மதுரை: இணையம் வழி நடைபெறும் சூதாட்டத்தில் சிறார்கள் பங்கேற்பதை தடுப்பதில் பெற்றோருக்கும் கடமை உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடுக் கப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், சிறார்களுக்கு விலை உயர்ந்த கைபேசிகளை வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். "குழந்தைகளுக்கு கைபேசி வாங்கி கொடுத்துவிட்டு, பெற்றோர் சரியாக கண்காணிப்பதில்லை. இதனால் தேவையற்ற சம்பவங்கள் நடக்கின்றன. அரசைக் காட்டிலும் பெற்றோருக்கே அதிக பொறுப்பு உள்ளது," என நீதிபதிகள் கூறினர்.

