கங்கை கொண்ட சோழபுரத்தில் இரவு நேரத்திலும் ஆய்வு
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரியலூர், பெரம்பலூரில் வரலாற் றுச் சிறப்புமிக்க அம்சங்கள் ஏராளமாக உள்ளன என்றும் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கங்கைகொண்ட சோழபுரம் அருகே அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரு கட்டங்களாக விரிவான அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது.
மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற பகுதியை நேற்று முன்தினம் ஆய்வு செய்த முதல்வர், அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருள்களையும் பார்வையிட்டார்.
மாளிகைமேட்டில் அரண்மனை இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இருபத்து இரண்டு அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்துள்ளது. அவற்றை எல்லாம் பார்வையிட்டார் தமிழக முதல்வர்.
பழங்கால தங்கக்காப்பு, மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி உள்ளிட்ட மேலும் பல பொருள்களை முதல்வர் பார்வையிட ஏதுவாக தொல்லியல்துறை அதிகாரிகள் வரிசையாக வைத்திருந்தனர்.
மேலும் சோழர்களின் கலையை பின்பற்றிய யானை தந்தத்தாலான மனித உருவம், சீன மண் பாண்டங்கள், செப்பு நாணயங்கள், செம்புப் பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள், வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகிய அரிய பொருள்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

