சென்னை: வீடு, மனை வாங்குவது தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள் மீது, கடந்த ஆறு ஆண்டுகளில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 3,000 புகார்கள் வந்துள்ளதாக தமிழக வீட்டு வசதித்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வீடு, மனை வாங்குவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நடைமுறைகளை எளிதாக்க, 2016ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் இதை அமல்படுத்த, மாநில அளவில் ரியல் எஸ்டேட் ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் வீட்டுவசதித்துறை கூறிஉள்ளது.
இதன்படி, எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள், மனைகள் அடங்கிய அனைத்து குடியிருப்புத் திட்டங்களையும் இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் அந்தத்துறையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பதிவு செய்யாமல் வீடுகளை விற்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளனர்.
"மொத்தமுள்ள புகார்களில் சுமார் 2,200 புகார்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சட்டப்படி, முறையாக பதிவு செய்யாத, 558 திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய ஆய்வின்படி, சென்னையில் மட்டும் 27,538 குடியிருப்புகள் வசிக்கத் தகுதியற்றவை எனத் தெரிய வந்துள்ளதாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுகட்டுமான திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை நேற்று முன்தினம் பார்வையிட்ட அவர், ஏராளமான குடியிருப்புகளின் நிலை மோசமாக இருப்பதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் 10,000 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்," என்றார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

