சென்னை: ஊழல் வழக்குகளை நீண்ட காலத்துக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் வைத்திருந்தால், ஊழலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 38 ஆண்டுகளாக 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவை அனைத்தையும் விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
போக்குவரத்து துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போதே நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 1983 முதல் 2021ஆம் ஆண்டு வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய தாமதமானது ஊழல் வழக்கின் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடும் என்றனர்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்துதப்பிக்க வழி வகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊழல் வழக்குகளை விரைந்து விசாரிக்காவிட்டால் ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும். எனவே அனைத்து ஊழல் வழக்குகளையும் விரைவாக முடிக்க வேண்டும்," என்றும் உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

