கோவை: தமிழகத்தில் செயற்கைக் கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதுவரை ஒரு செயற்கை கருத்தரித்தல் மையம்கூட அமைக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தனியார் செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் ஏராளமான தம்பதியர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. எனினும், வேறு வழியில்லாமல் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு தனியார் செயற்கை கருத்தரிப்பு மையமாவது இயங்கி வருகிறது. அண்மைய கணக்கெடுப்பின்படி, சென்னையில் மட்டும் 59 கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. இதையடுத்து, கோவையில் 14, மதுரையில் 11 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தத்தில், 26 மாவட்டங்களில் மொத்தம் 155 தனியார் கருத்தரித்தல் மையங்கள் உள்ளன.
இதே வேளையில், தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அம்மருத்துவமனைகளில் கருத்தரித்தல் மையம் அமைக்கப்படவில்லை.
இதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து கூறி வருகிறது என்றும் அந்த நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கடந்த 2007ஆம் ஆண்டிலேயே செயற்கைக் கருத்தரித்தல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பே ஆந்திரா, கேரளா அரசு மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மட்டுமே செயற்கைக் கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் சுமார் 2.75 கோடி தம்பதியர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறப்பகுதிகளில் ஆறு தம்பதியரில் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்சினை உள்ளது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. "தமிழகத்திலும் குழந்தையின்மை தம்பதியினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் ரீதியாக மட்டும் அல்லாமல் மனரீதியாகவும் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. இதனால் மண முறிவுகள் ஏற்படுவதும் தெரிய வந்துள்ளது," என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார் சமூக ஆர்வலர் வெரோனிகா மேரி.
எனவே, தமிழக அரசு இப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
தமிழகம் முழுவதும் 155 தனியார் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

