சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால்தான் சட்டப்படி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரிப் பாக்கியாக உள்ள தொகையில் 20 விழுக்காட்டை மட்டும் (ரூ.206 கோடி) செலுத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதையும் அவர் செலுத்தவில்லை என்றும் வருமானவரித்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், இதன் காரணமாகவே அவருடைய சொத்துகளும் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் விஜயபாஸ்கர். அப்போது வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்துகள் வாங்கிக் குவித்ததாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து 2017ஆம் ஆண்டு அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சொத்து குவிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து, விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
விசாரணையின்போது அவர் ரூ.206.42 கோடி வருமான வரிப் பாக்கியைச் செலுத்தவில்லை என்ற வாதம் வருமான வரித் துறையால் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குச் சொந்தமான நிலங்கள், நான்கு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அவர் வரிப் பாக்கியைச் செலுத்தவில்லை என வருமான வரித்துறை தெரிவித்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.