சென்னை: திமுக அரசுக்கு எதிராக இந்த மாதம் அடுத்தடுத்து மூன்று நாள்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 13, 14 ஆகிய நாள்களில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர்.
மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலில் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை யில் நேற்று முன்தினம் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவினரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் ஊடுருவல் போதைப்பொருள் புழக்கம், ரவுடிகளின் அராஜகங்கள் மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
"மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பர் 9ஆம் தேதி பேரூராட்சி, டிசம்பர் 13ல் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் டிசம்பர் 14ல் ஒன்றியங்களிலும் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்," என்று எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

