அரசாங்க, தனியார் துறைகளில் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் கூடியவிரைவில் வீட்டிலிருந்தே வேலைபார்க்க முடியும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான சூழலை உருவாக்க தமிழக அரசாங்கம் திட்டங்கள் வகுத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வேலைபார்க்க ஏதுவாக அவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். அதோடு அவர்களுக்கு கணினி பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உயர்நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திரு ஸ்டாலின் சொன்னார். இந்தக் குழுக்கள் அவற்றின் பரிசீலனைகளை தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.


