சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது
சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 217 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 31 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தாலி எடுத்துக் கொடுத்து அட்சதை தூவி திருமணம் நடத்தி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர், "ஒன்றோ இரண்டோ நிறுத்திக் கொள்ளுங்கள். அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள்" என்று வாழ்த்தினார்.
"முன்பு திருமணக் கட்டுப்பாடு இருந்தது. நாம் இருவர், நமக்கு இருவர் என்று சொல்லப்பட்டது. இது, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது," என்றார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரே நேரத்தில் 31 மணப்பெண் களுக்கு மணமகன்கள் தாலி கட்டினர். அவர்களுக்கு தாய் வீட்டு சீதனம்போல் மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக பீரோ, மெத்தை, கட்டில், தலையணைகள், குடும்பம் நடத்த வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் உள்ளிட்டவை ரூ.72 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவையும் முதல்வர் பாராட்டினார்.
"சேகர் பாபு அல்ல செயல் பாபு," என்றார் அவர்.
"இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா உச்சத்தில் இருந்தபோது இத்துறை சார்பில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமம் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். பெண் ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
"பெரியாரின் சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன," என்று இந்து அறநிலையத் துறையின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.
2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், "தமிழகத்தில் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணை களுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினார்.