புதிய புயல் சின்னம் உருவாகிறது
சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தப் புதிய புயல் சின்னமானது வரும் 8ஆம் தேதி தமிழகம், ஆந்திர மாநிலங்களை நெருங்கும் என்றும் அப்போது தமிழக கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
விஜய் ரசிகர்களின் சுவரொட்டிகளால் அரசியல் களத்தில் சலசலப்பு
சென்னை: நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் ஆனதையடுத்து அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என ஆதரவாளர்களும் ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'நாளைய முதல்வர்', 'கூட்டணிக்கு அழைப்பு' எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களிலும் இந்தச் சுவரொட்டிகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், ஒரு தரப்பினர் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட சுவரொட்டிக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். தற்போது திரையுலகப் பணிகளில் மட்டுமே விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. எனினும் அவரது அனுமதி இல்லாமல் இதுபோன்ற சுவரொட்டிகளை அவரது ரசிகர் மன்றத்தினர் வெளியிட வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசுப் பேருந்து மீது இரு லாரிகள் மோதல்: மூவர் பலி; 30 பேர் படுகாயம்
சென்னை: அரசுப் பேருந்து மீது இரண்டு லாரிகள் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பலியாகினர். மேலும், முப்பது பேர் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் லாரி ஒன்றை முந்திச் செல்ல அரசுப் பேருந்து ஓட்டுநர் முயன்றார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி சிதைந்து போனது. மேலும் முன்னே சென்ற லாரியும் பேருந்து மீது பக்கவாட்டில் மோதியது. ஒரு லாரி சாலையில் கவிழ்ந்தது. விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு
கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் நான்காயிரம் காவலர்களும் அதிகாரிகளும் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும் காவலர்கள் குவிக்கப்பட்டதுடன், சந்தேகத்துக்குரியவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என்றும் காவல் ஆணையர் கூறினார்.
மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்கத் தெரியவில்லை
சென்னை: தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் சரியாகப் படிக்கத் தெரியவில்லை என தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இருபது விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் உரையைப் புரிந்து கொள்கின்றனர். அதேபோல் 47 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே 80% ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23% மாணவர்கள் மட்டுமே எண்களைக் கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள், வடிவங்களைக் கொண்ட அடிப்படைகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் தெரிவித்துள்ளது.

