மு.க.ஸ்டாலின்: ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது பெருமை தரக்கூடியது
புதுடெல்லி: ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடியது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் இந்தியா மிக முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது என்றும் ஜி20 உறுப்பு நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு செல்வார் என தாம் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளதை அடுத்து நடத்தப்பட உள்ள பல்வேறு கருத்தரங்குகளுக்குத் தமிழகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் எனத் தாம் உறுதி அளிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
"இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை உருவாக்கி உள்ளோம்.
"உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழகம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவோம்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.