விஜயதாரணி: மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன்
சென்னை: இனி காங்கிரசுக்கு முதல் எதிரி என்றால் அது பாஜக அல்ல என்றும் ஆம் ஆத்மிதான் முதல் எதிரி என்றும் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருவதாகவும் அச்சமயம் மாநிலத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். குஜராத் தேர்தலில் மதச்சார்பற்ற வாக்காளர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு முழுமையாகக் கிட்டாமல் ஆம் ஆத்மியால் சிதறிப்போய்விட்டது என்றார் விஜயதாரணி.
வாக்காளர் பட்டியலில் திருத்தம்
செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரை திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரி வித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்கள் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக ஆளுநரை விமர்சிக்கும் சுவரொட்டியால் கோவையில் பரபரப்பு
கோவை: தமிழக ஆளுநரை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல் பெயரில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சர்ச்சைக்குரிய சில வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆளுநருக்காக ஆண்டுதோறும் 6.5 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகவும் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ள 22 முக்கிய மசோதாக்கள் தொடர்பாக கோப்புகள் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடு திருட முயன்ற கல்லூரி மாணவர்கள்: கிராம மக்கள் தாக்குதல்
கோவை: ஈரோடு மாவட்டத்தி்ல் உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளியான நாச்சிமுத்து (36 வயது) நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளைப் பிடித்து வீட்டின் முன்பு கட்டிவிட்டு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது இருபது வயதான கல்லூரி மாணவர்கள் பாலாஜி, சபரி ஆகிய இருவரும் அங்கிருந்த ஆடு ஒன்றைத் திருடிச் செல்ல முற்பட்ட போது, அந்த ஆடு சத்தம் போட்டுள்ளது. நாச்சிமுத்து வெளியே வந்து பார்த்தபோது, மாணவர்கள் இருவரும் ஆட்டை திருடிச்செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர் உதவி கேட்டு குரல் கொடுக்க, அப்பகுதியினர் திரண்டு வந்த அந்த இளையர்களைப் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் மரத்தில் கட்டிவைத்து தாக்கி உள்ளனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையின்போது மாணவர் சபரி, ஆட்டோ ஓட்டுநரான தனது தந்தையிடம் சண்டை போட்டு கடந்த மாதம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கியதும் மதுபோதையில் சாலையில் சாகசத்தில் ஈடுபட்டபோது நொறுங்கிய அந்த வாகனத்தைச் சரிசெய்வதற்காக ஆட்டைத் திருடியதும் தெரியவந்தது.
ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி
சென்னை: நடிகர் ரஜினி இன்று தனது 73ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தனது ரசிகர் களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு போயஸ் தோட்டத்தில் நடைபெறும் என்றும் ரஜினியின் பிறந்த நாளையொட்டி திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி முக்கிய அறிவிப்பு ஏதும் வெளியிடுவாரா எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.